search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்"

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    வேலாயுதம்பாளையம்:

    அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தோட்டக்குறிச்சி அய்யம்பாளையம், புதுகுறுக்குபாளையம் உள்ளிட்ட இடங்களில் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கா நீங்கள் வாக்களித்தீர்கள்? அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரா? ஜெயலிலதாவுக்குதான் வாக்களித்தீர்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கு நீங்கள் வாக்களிப்பீர்களா? ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த கூத்துகள் உங்கள் அனைவருக்கும் தெரியும்.

    கூவத்தூரில் எம்.எல்.ஏ.க் களை அடைத்து வைத்தபோது ஒரு எம்.எல்.ஏ. சுவர் ஏறி குதித்தார். இன்னொருவர் ஓடும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி ஓடினார். எடப்பாடி பழனிச்சாமி 10 மாத குழந்தையாக தவழ்ந்து சென்று சசிகலா காலில் விழுந்து பதவிக்கு வந்தார்.

    இந்த ஆட்சி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருக்கிறது. நடந்து முடிந்த 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களிலும் தி.மு.க. வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வருகின்றன. எனவே இந்த ஆட்சி தற்போது டெட்பாடி ஆகி விட்டது. பிணத்தை சவப் பெட்டியில் வைத்து 4 ஆணி அடிப்பார்கள். அது தான் இப்போது நடைபெறும் 4 சட்டமன்ற இடைத்தேர்தல். நீங்கள் ஆணி அடித்தால் புதைகுழியில் தள்ளி விடலாம்.

    மோடி போட்ட பிச்சை இந்த முதல்-அமைச்சர் நாற்காலி. மோடிக்கு கடந்த மாதம் 18-ந்தேதி டாடா காட்டி விட்டோம். எடப் பாடி பழனிச்சாமியை வீட்டுக்கு அனுப்ப உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்தீர்கள் என எடப்பாடி பழனிச்சாமியை கேட்டால், 2 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததே சாதனை. 38 ஆயிரம் போராட்டங்களை சந்தித்து சமாளித்துள்ளோம் என்கிறார்.

    இதுவெல்லாம் சாதனையல்ல வேதனை. எந்த கட்சியுடன் உதவியும் இல்லாமல் தூத்துக்குடியில் மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் காவல் துறையை வைத்து 13 பேரை காக்கா, குருவியை போல சுட்டு கொன்றனர். 1,000 பேர் கூடியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறினர். எனவே இந்த ஆட்சி தேவையா? என்பதை சிந்தித்து பாருங்கள்.

    மக்களின் எழுச்சியை பார்க்கையில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள 4 இடைத்தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்கிற நம்பிக்கை வந்துவிட்டது. எனவே ஜூன் 3-ந்தேதி தலைவர் கருணாநிதி பிறந்த தினத்தின் போது, நமது தலைவர் ஸ்டாலினை முதல்-அமைச்சராக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. இதற்காக ஒட்டு மொத்த தமிழகமும் காத்திருக்கிறது.

    அப்போலோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா இறந்தது எப்படி? என்பது குறித்து கேட்டால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை. ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக முதலில் கூறியவர் பன்னீர்செல்வம். சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக்கூறியதோடு அவர் நின்று விட்டார்.

    ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களை தீட்டுவது ஒருபுறமிருப்பின், முதல் வேலையாக ஜெயலலிதா மரண சந்தேகம் குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதுதான் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    ×